Tuesday, April 28, 2009

‘ராட்சஸ’பட்சேவுக்கு முதுகு சொறிவது எப்படி?கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்டு அரசியல்வாதிகளை முகம் சுளிக்க வைப்பது எப்படி? வலிக்காமல் குத்துவது எப்படி? ரத்தம் வராமல் முகத்தில் கீறல் போடுவது எப்படி? என்று பல எப்படிகளை வட இந்திய செய்தித் சேனல்களைத்தான் கேட்க வேண்டும்.

அரசியல்வாதிகளை எப்படி ‘சுருக்’ என கோபப்பட வைப்பது என்பதை டெவில்ஸ் அட்வகேட் கரண் தாப்பர், ஜெயலலிதாவிடம் எடுத்த நேர்காணலைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ‘இதற்கு மேல் உங்களுக்கு பதிலளிக்க விருப்பம் இல்லை, பேட்டியை முடித்துக் கொள்ளலாம்’ என்று ஒரே அடியாய் போட்டார்.
அந்த அளவுக்கு தேசிய (?) மீடியாவில் ஆட்கள் ஷார்ப்பாக எதற்கும் பயப்படாமல் கேள்வி கேட்பார்கள்.

ஆனால் இன்று (28-04-2009) சிஎன்என்-ஐபிஎன் தொலைக் காட்சியில் ‘ராட்சஷ’பட்சேவுக்கு முதுகு சொறிந்து, வலிக்காமல் கேள்வி கேட்டு அதை ஒளிபரப்பியது. அடடா என்ன அற்புதமான கேள்விகள் அவை!

மொத்தம் 23 கேள்விகளை கேட்டுள்ளது அந்த டி.வி. அதில் ஒரு கேள்வி கூட ஈழத் தமிழர்களின் துன்பம் குறித்துக் கேட்கவில்லை.

புலிகளை எப்போது அழிப்பீர்கள், தலைவர்களை எப்போது பிடிப்பீர்கள், இந்தியாவுக்கு அனுப்புவீர்களா, உங்கள் நாட்டிலேயே வைத்துக் கொள்வீர்களா? தலைவர்கள் அங்கேதானே இருக்கிறார்கள்? பிரபாகரனை பார்த்தால் என்ன செய்வீர்கள்? பிடித்தால் என்ன செய்வீர்கள்? இந்தியாவுக்கு அனுப்புவீர்களா? இல்லை அவருக்கு சோறுபோட முடியவில்லை என்று இந்தியாவுக்கு அனுப்புவீர்களா?

உங்கள் ராணுவத்துக்கு நீங்கள் இட்ட கட்டளை போரை தொடர வேண்டும் என்பதுதானே? புலிகளின் தலைவர்களை உயிருடனோ பிணமாகவோ பிடிக்க வேண்டும் என்பதுதானே? போரை இன்னும் நிறுத்தவில்லைதானே? போருக்குப் பின் என்ன செய்வீர்கள்? (துப்பாக்கி, பீரங்கியைத் துடைத்து வைப்போம்) என்ற ரீதியில் அந்த டி.வி. கேட்ட கேள்விகளைப் பார்த்தால் ஏதோ ரா, ஐ.பி., சிபிஐ அதிகாரிகள் முன்கூட்டியே பதில் எழுதிக் கொடுத்து பிறகு அதையே கேள்வியாகக் கேட்டது போல் உள்ளது.

அவனும் பித்துப் பிடித்தவன் போல் திரும்ப திரும்ப ராஜீவ் கொலைக்கு காரணமானவர்களை இந்தியாவுக்கு அனுப்புவோம் என்று காதில் பூ சுற்றுகிறான். அங்கே பிரேமதாசா கொலைக்கு யாரை பிடிப்பானாம்? அதற்கு தண்டனை நாடு கடத்துவதுதானா? அதைப் பற்றி கேட்கத் தெரியவில்லை அந்த முட்டாளுக்கு. (அது சரி...எழுதிக் கொடுத்ததைத் தானே கேட்க முடியும்)

கடந்த சில மாதங்களுக்கு முன் ஐ.நா. வெளியிட்ட புள்ளி விவரத்தில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஏராளமான தமிழர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து சிங்கள ஹிட்லரின் பதில் என்ன என்று அந்த டி.வி. நிருபருக்கு கேட்கத் தெரியவில்லை. (முதுகு சொறியும் போது வலிக்குமே. அதை ஏன் கேட்க வேண்டும் என்று விட்டுவிட்டார் போல.)

சரி... இடம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு என்ன மாதிரியான நிவாரணப் பணிகளை செய்துள்ளீர்கள்? அவர்களை ஏன் பிச்சைக்காரர்களைப் போல உணவுக்கு கையேந்தும் நிலையில் வைத்துள்ளீர்கள்? என்று கேட்க ஓசியில் பீஸô, பர்கர் சாப்பிடும் அந்த டி.வி. நிருபருக்குத் தெரியவில்லை.

உங்களை நம்பி வந்த மக்களை மரத்தடியில் வைத்திருப்பது ஏன்? கம்பி வேலிக்குள் அடைத்து வைத்திருப்பது ஏன்? பாதுகாப்புக் காரணத்துக்காக என்றால் உங்கள் ராணுவம் வைத்திருக்கும் துப்பாக்கி டம்மி துப்பாக்கியா என்று கேட்க அந்த மூடனுக்கு தெரியவில்லை. (சிங்கள இனவெறியனிடம் கம்பி வேலியைத்தானே எதிர்பார்க்க முடியும். எங்கே புலி மீண்டும் பாய்ந்து வந்து விட்டால் என்ன செய்வது என்று சிங்கள ஹிட்லர் பயந்து கொண்டே இருக்கிறான்)

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளைக்கு புலிகளுடன் தொடர்பு என்று சேற்றை வாரி இறைத்தது ஏன்? நார்வே சமரசம் தேவையில்லை என்று வெளியேற்றியது ஏன்? உலக நாடுகள் அனைத்தும் போர் நிறுத்தம் கேட்டும் மறுப்பது ஏன்? அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா உலகத் தமிழர்கள் புலிக் கொடியுடன், பிரபாகரனே தங்கள் தலைவர், தமிழீழமே வேண்டும் என்று போராட்டம், மறியல், உண்ணாவிரதம் செய்கிறார்களே, உங்கள் பதில் என்ன? என்று பல கேள்விகள் கேட்கக் கூடாத கேள்விகள் மட்டுமல்ல. மொத்த ஊடகங்களும் கேட்க மறந்த கேள்விகள்.

மனிதாபிமானம் பேசும் இந்திய ஆங்கில ஊடகங்கள் இந்தக் கேள்விகளை எழுப்பாதது ஏன்?

பாலஸ்தீனத்தில் பட்டாசு வெடித்தால் அய்யோ, அம்மா என்று அலறி அடித்து படம் காட்டும் கயவர்கள் யாருக்கு சாமரம் வீச, யாரிடம் வாங்கிய காசுக்கு வாலாட்ட இப்படி செய்தி வெளியிடுகிறார்கள்?

தெரிந்தால் சொல்லுங்கள். ப்ளீஸ்...

பின் குறிப்பு: வலிக்காமல் முதுகு சொறிவது எப்படி என்று போட்டி வைத்தால் இந்திய ஆங்கில பத்திரிகை, டி.வி. சேனல்களை எவனும் முந்த முடியாது. அவ்வளவு சுகமாக சொறிவார்கள்.