Friday, April 24, 2009

என்ன கொடுமை ராஜபக்சே இது?


இலங்கை அரசின் பொய் பரப்புரைச் செய்திகளை வெளியிடுவதிலும் அதை வைத்துக் கொண்டு விளக்கக் கட்டுரைகள் எழுதுவதிலும் (இந்திய) பத்திரிகைகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதை சமீபத்திய உதாரணம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் சில ஆயிரம் பொதுமக்களே புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சிக்குண்டு உள்ளனர் என்று இலங்கை ராணுவம் கூறியது. பின்னர் 70 ஆயிரம் பேர் உள்ளனர் என்றது. அதை மறுத்த புலிகள் தரப்பும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் 2 லட்சம் பேர் தவிக்கிறார்கள் என்றனர்.

இதைப் பிடிக்காத சிங்கள அரசு ஐசிஆர்சி உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியது. மேலும் அவர்கள் கூறும் கணக்குகள் எல்லாம் ‘கள்ள’ கணக்கு என்றது. நாங்கள் சொல்லும் கணக்கே உண்மை என்று உளறியது. இதை தமிழக-இந்திய ஊடகங்கள்...ஏன் சர்வதேச சமூகமும் உண்மை எது என விசாரிக்காமல் திரும்பக் கூறி வந்தன. அதே வேளையில், தொண்டு நிறுவனங்களை ஏன் வெளியேற்றினீர்கள் என்று ஒரு வார்த்தை எந்த ஊடகமும் சிங்கள அரசை நோக்கி கேட்கவில்லை.

முதலில் 50 ஆயிரம் பேர் ‘சிக்கியுள்ளனர்’ என்றார்கள். பின்னர் 70 ஆயிரம் பேர் என்றார்கள். அதை ஐ.நா. முதல் இந்திய ஊடகங்கள் வரை வழிமொழிந்தன.
இந்த இடத்தில் பத்திரிகைகள் எப்படி அரசின் கணக்கை வழிமொழிகின்றன என்பதை சிந்திக்க வேண்டும். சாதாரண கொலை, கொள்ளை, திருட்டு வழக்கைப் பொருத்தவரை போலீஸ் என்ன சொல்கிறது என்பதே பத்திரிகைகளுக்கு முக்கியமான விஷயம். சில புலனாய்வுப் பத்திரிகைகளே தாங்களே புலனாய்வு செய்து எழுதுவார்கள். மற்ற பத்திரிகைகள் அரசின் அறிக்கையை மறுபிரசுரம் மட்டுமே செய்யும். அல்லது ஈழப் பிரச்னையைப் பொருத்தவரை சிங்கள அரசு கொடுக்கும் பணத்துக்காக எது வேண்டுமானாலும் எழுதும். எவரது பேட்டியை வேண்டுமானாலும் போட்டு முதுகு சொறியும். எ.கா.தினம..ம் (வாங்குன காசுக்கு மேல கூவறாண்டா..ங்கொய்யால.. என்று இலங்கை அரசே நினைக்கும் அளவுக்கு எழுதுவார்கள்).

இப்போது வெளியே வந்தவர்களே 1 லட்சத்துக்கும் அதிகமானோர் என்கிறார்கள். இன்னும் சில ஆயிரம் பேர்தான் உள்ளனர் என்று இப்போதும் சொல்கிறார்கள்.
ஆனால் மக்கள் முல்லைத் தீவில் இருந்தபோதே அந்த மாவட்டத்தின் அரச அதிபர்...(கவனிக்க..அரசின் உயர் அதிகாரி அவர்) 80 ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர் என்றார். குடும்பத்துக்கு 4 பேர் என்று வைத்துக் கொண்டாலே 3,20000 பேர் உள்ளனர் என்றார். இவையெல்லாம் இன்டர்நெட்டில் வந்த செய்திகள். இலங்கை அரசு அதிகாரியே கூறிய இச்செய்தியை இந்திய ஊடகங்கள் வெளியிடத் தயாராக இல்லையே. ஏன்?

தற்போது புதுக் குடியிருப்பும் போய் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் வெளியேறிய பின்னர் கணக்குப் பார்த்தால் சிங்களத்தின் சின்னப் புத்தி தெளிவாகத் தெரிந்து விட்டது.

இதை எந்த ஊடகமும் இது வரை கேள்வி எழுப்பாதது ஏன்?. பிரபாகரன் தீவிரவாதியா இல்லையா என பட்டிமன்றம் நடத்தும் இந்திய பத்திரிகைகள், தேசீய தொலைக் காட்சிகள் இந்த மனிதாபிமான கேள்வியை எழுப்பாதது ஏன்?
அவர்களைத் தடுக்கும் அரசியல் எது? உண்மையில் எத்தனை பேர்தான் இன்னமும் உள்ளே இருக்கிறார்கள் என்று தலையங்கத்தில் கேட்டது உண்டா? ஏன் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை அப்பகுதிக்குள் அனுப்ப மறுக்கிறீர்கள் என்று கேட்டது உண்டா?

இது வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ராணுவத்தின் முகாமுக்கு (சித்திரவதை?) வந்துள்ளனர். அங்கு வந்து சேர்ந்தால் ஏதோ சொர்க்கமே கண் முன் வந்து, டன்டனக்கா... ஏய்....டனக்குனக்கா என்று ஆட்டம் போடலாம் என்பது போல் பரப்புரை செய்து வந்தது சிங்கள் அரசு.

ஆனால் இப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க உணவு இல்லையாம். சமைத்த உணவு இருந்தால் கொடுங்கள் என்று மக்களிடமே பிச்சை கேட்கிறது சிங்கள அரசு.

யார் யாரிடமோ கெஞ்சி, பிச்சை எடுத்து கிபீரில் சென்று தமிழர்கள் மீது டன் கணக்கில் குண்டு வீசவும், ஆட்லரி ஷெல் அடிக்கவும், பாஸ்பரஸ் குண்டு, நச்சு குண்டு வீசவும் முடிந்தது. அதற்காக பல ஆயிரம் கோடியில் போர் நடத்த முடிந்த சிங்கள அரசால் தங்களது பகுதியில் உள்ள, தங்களை ‘நம்பி’ வந்த தமிழர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வேளை உணவும், மருந்தும் கொடுக்க வழியில்லையாம்!.

என்ன கொடுமை ராஜபக்சே இது?