Wednesday, October 21, 2009

பதிவர்களை பெருமைப்படுத்திய எழுத்தாளர்
சினிமா பற்றியும், நடிகர்கள் பற்றியும் எப்படிப்பட்ட விஷயங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக நடிகைகள் பற்றி என்பதை ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என்றும் எப்போதும் தேவைப்படும் விஷயங்கள் இரண்டை இப்போதைக்குக் குறிப்பிடலாம். 1. சினிமா. 2. சினிமா நடிக, நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள். இந்த வார்த்தையைக் கண்டுபிடித்தவர் எந்த மொழியியல் அறிஞர் என்று தெரியவில்லை. கிசுகிசுக்கள் எழுதுவதற்கு என்றே ஒரு குரூப் அலைவதும் அதைப் படிப்பதற்கென்றே மற்றொரு குரூப் திரிவதும் யாருக்கும் தெரியாத ரகசியம் இல்லை. குறிப்பாக வாரப் பத்திரிகைகள். பெருந்தன்மையாக வெளியாகும் பத்திரிகைகள் கூட போகிற போக்கில் சில பிட்டுகளை வீசிவிட்டுச் சென்றால் தான் அந்த நாள் அல்லது அந்த வாரம் முழுமை பெறுவதாக அமையும் என்பது போல வெளியிடுகின்றன.

"நாட்டியத்தில் கோலோச்சும் அந்த நடிகருடன் சேர்ந்து குடும்பம் நடத்த குடுமிப்பிடி சண்டை போடவும் தயாராகிவிட்டாராம் அவ்விட பூமி நாயகி. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் உற்சாக பானத்தை அளவுக்கதிகமாக ஏற்றிவிட்டு ஹோட்டலில் மட்டையாகி கிடக்கிறாராம். இந்தக் கோலத்தைப் பார்த்து ஜொள்ளு விடாதவர்களே இல்லையாம். பாவம் அந்த நடிகை என்கிறார்கள் அவர் நலம் விரும்பிகள்.'

இப்படி ஒரு செய்தி. சாரி கிசுகிசு. இதனால் யாருக்கு என்ன லாபம். இதை எழுதியவருக்கு? படித்தவருக்கு? அந்த நடிகைக்கு? நடிகருக்கு? இந்த தமிழ்கூறும் நல்லுலகுக்கு? என்ன பயன்? ஒன்றும் இல்லை. ஒரு வேளை எழுதியவருக்கு சன்மானம், விற்பவருக்கு சர்குலேசன் ஏறுவது, படிப்பவருக்கு சில நிமிட கிளுகிளுப்பு. அவ்வளவுதான். (இது போல நானும் படித்து கிளுகிளுப்பு அடைந்திருக்கிறேன். அதனால் முன்னாடியே சொல்லிடறேன்... பின்னூட்டத்தில் ஆயுதங்களுடன் வரவேண்டாம்...)

எந்த ஒரு சினிமா நிருபருக்கும் இருக்கும் தொடர்புகளைப் பயன்படுத்தி அவரே நேரில் பார்த்த, அல்லது செவிவழிச் செய்தியை விற்பதும் உண்டு அல்லது தனது
பத்திரிகையில் எழுதுவதும் உண்டு. சினிமா நடிக, நடிகைகள் பற்றி நல்ல விஷயங்களே இல்லையா என்று கிசுகிசு படித்து வெறுக்கும் ரசிக மகாஜனங்களுக்காக இருக்கவே இருக்கிறது நடிகரின் அரசியல் பிரவேசம் பற்றிய கிசுகிசு. உள்ளே ஒன்றும் இல்லாத விஷயங்களை ஊதிப் பெரிதாக்கி அதை உண்மையாக்கிவிடும் கிசு கிசுவும் உண்டு. அதனால் பாதிக்கப்பட்டவர்களும், நன்மையடைந்தவர்களும் ஏராளம்.

நடிகர், நடிகைகள் பற்றி பத்திரிகையில் வருவது எல்லாமே கிசுகிசுக்கள்தான் என்ற நிலையே இருக்கிறது. அதே போல கிசுகிசுக்கள் வராதா என்று ஏங்கும் புது நடிகர், நடிகைகள் நிறைய பேர். இந்தமாதிரியான சூழலில் ஒரு சினிமா நிருபர் எதற்கு முக்கியத்துவம் தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாக ரசிகர்களை (வாசகர்களை?) கவர்ந்து இழுக்கும் விஷயமான கிசுகிசுதான். அதுவும் நீண்ட நாட்கள் சினிமா துறை ஆட்களுடன் தொடர்பு கொண்ட ஒருவர் அப்படி எழுதுவதில் எந்த ஆச்சரியமும் இருக்காது.

ஆனால் அப்படி 20 ஆண்டுகள் சினிமா துறையில் சிவாஜி கணேசன் முதல் இன்று தனுஷ் வரை அனைத்து நடிகர், நடிகைகளிடமும் பேட்டி எடுத்து, பழகிய பத்திரிகையாளரான திரு. தமிழ்மகன், ஒவ்வொரு நடிகர், நடிகை பற்றியும் மிக நல்ல விஷயங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள செல்லுலாய்ட் சித்திரங்கள் என்ற தனது நூலில் எழுதியுள்ளார். நிழலில் பார்க்கும் முகங்களின் பின்னால் ஆச்சரியமூட்டும் பல நிஜ முகங்கள் இருப்பதை இந்த நூலைப் படிக்கும் போது அறிய முடிகிறது.

ஒவ்வொரு நடிகர், நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றி எழுதும்போதும் அவர்களிடம் உள்ள ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தைக்
குறிப்பிடுகிறார். சில சமயம் அது சிலருக்கு பாதகமான விஷயமாகவும் இருக்கும். இந்த சூழலில் இவர் ஏன் இப்படி நடந்து கொண்டார். மனிதர்கள் எந்த உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களது அடிப்படைக் குணம் (நல்லதோ கெட்டதோ) என்றும் மாறாமல் அப்படியே நிலைத்திருப்பது ஏன் என்று தனது கட்டுரையின் முடிவில் ஒரு தேடல் நிறைந்த கேள்வியாக எழுப்பி முடிக்கிறார் தமிழ்மகன்.

திரையுலக முகங்களில் தன்னால் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்க முடிந்தது, அவர்கள் பற்றி எழுதுவதற்கு தன்னிடம் நல்ல விஷயங்களே உள்ளன என்பதை பறைசாற்றும் விதத்தில் எழுதியிருக்கிறார். திரையுலக பிரமுகர்களைப் பற்றிய அவரது பார்வை உயர்ந்த கோணத்திலேயே இருந்துள்ளது என்பதை இதைப்படிக்கும் போது உணர முடியும்.

ஆன்மிகத்திலேயே என் மனம் அதிக நாட்டம் கொண்டுள்ளது என்று கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் நடிகரை நமக்குத் தெரியும். ஆனால் ஓரளவுக்கு புகழ் இருந்த போது கூட அதை வேண்டாம் என்று கூறிச் சென்று துறவறம் பூண்ட நடிகையை எத்தனை பேருக்குத் தெரியும். அவர் நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப் பற்றி வந்த கிசுகிசுக்களையும் நான் படித்திருக்கிறேன். ஆனால் அந்த நடிகையின் உண்மை முகத்தை தமிழ்மகன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். தனது புகழைத் துறந்து விட்டதோடு அல்லாமல் மைசூரிலுள்ள பரமஹம்ச நித்தியானந்தரின் நித்தியானந்த பீடத்தில் ஸ்வாமினி நிர்மலாந்தா என்ற சந்நியாசியாக இருக்கிறார். அவர்தான் நடிகை ராகசுதா. இதைப் படித்த போது ஆச்சரியமாக இருந்தது. எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் இதைப் படித்துவிட்டு தமிழ்மகனைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு உதாரணம்தான். இப்படி பல விஷயங்களைக் குறிப்பிடலாம்.

இந்தக் கட்டுரைகள் உயிரோசை இணைய இதழில் திரைக்குப் பின்னே என்ற தலைப்பில் தொடராக வந்தபோது, தனது வலைப்பதிவிலும் (தமிழ்மகன்) அதை வெளியிட்டார். அதைப் படித்த எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன். ஆனால் பின்னுட்டமிட்டவர்கள் ஒரு சிலரே. அது அவருக்கு மேலும் உற்சாகம் அளித்திருக்கிறது. இதனால் யாரெல்லாம் அவருக்குப் பின்னூட்டமிட்டார்களோ, அவர்களது பெயரையெல்லாம், தனது நூலின் நன்றியுரையில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். பல சிறுகதைகள், சில நாவல்கள், தமிழக அரசின் பரிசு, சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப் போட்டியில் முதல் பரிசு என்று பெயர் பெற்ற இவர், வலைப்பதிவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களது பெயரை தனது நூலில் வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

நீங்களும் அவரது வலைப்பதிவில் பின்னூட்டமிட்டிருந்தால் புத்தகத்தை வாங்கிப் பாருங்கள். உங்கள் பெயரும் இருக்கலாம்.

ஏனென்றால் என் பெயரும் அதில் இருக்கிறது.


செல்லுலாய்ட் சித்திரங்கள், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை ரூ.100.

6 comments:

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி.

புலவன் புலிகேசி said...

தமிழ்மகன் போன்றவர்கள் தான் நன்றி மறவாதவர்கள்.....

ரகுநாதன் said...

வாங்க புலவரே...

//தமிழ்மகன் போன்றவர்கள் தான் நன்றி மறவாதவர்கள்.....//


ஆமாம்...உண்மையில் அது ஆச்சரியம்தான்... நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.. :)

ரகுநாதன் said...

நன்றி சின்ன அம்மிணி :)

venkat said...

இப்படியும் ஒரு நிருபர் ஆச்சரியமாக உள்ளது.
தமிழ் மகனுக்கு வாழ்த்துக்கள்.

ரகுநாதன் said...

@ venkat

நன்றி :)