Monday, October 26, 2009

"இந்தி"யன் பார்வையில் தமிழன்- பாகம் 4

எப்போது எனக்குள்ளே இந்தி எதிர்ப்பு உணர்வு புகுந்தது என்று எனக்கு நினைவில்லை. எங்கள் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் பிரயாணிகள் தங்குமிடம் என்ற வாக்கியத்தின் கீழே தார் பூசி அழிக்கப்பட்ட சொற்றொடர் மட்டும் இன்றும் நினைவிலிருந்து அகலவில்லை. அதற்கும் கீழே இருந்த ஆங்கிலத் தொடர் அப்படியே இருந்தது. இடையில் ஏன் தார் பூசி உள்ளார்கள் என்று யாரிடமும் கேட்கத் தோன்றவில்லை.

ஜெகஜித் சிங் என்னிடம் கேட்ட கேள்விக்கும் அதற்கான பதிலுக்கும் இடையில் கிடைத்த சின்ன கேப்பில் பல நினைவுகள் வந்து சென்றன. அவன் கேட்டது இது தான்.

"சார் நீங்க பாலக்காடு போயிருக்கீங்களா?' அவ்விட பூமி நாயகிகளைப் பார்த்து ஏங்கும் எங்குலத் தமிழ் வீர இளைஞர்களைப் போல இவனும் அவர்கள் பக்கம் ஜொள் விட ஆரம்பித்து விட்டானோ என்று சட்டென்று ஒரு எண்ணம் மின்னி மறைந்தது. இவங்க ஆளைவிடவா அந்தப் பெண்கள் கலராக இருக்கிறார்கள். காதலுக்கு கண் இல்லை என்பது போல வேறு எதுக்கெல்லாம் கண் இல்லை என்ற பட்டியல் போட வேண்டி வருமோ என்று நினைத்துக் கொண்டேன்.

இந்தி எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டது எப்படி என்று தெரியவில்லை என்று கூறினேனோ அதே போல அவ்விட பூமி மீது எனக்கு ஏற்பட்ட கோபமும் எப்படி ஏற்பட்டது என்று புரியவில்லை. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசினேன்.

"போனதில்ல. ஆனா நல்லா இருக்கும். வாளையாறு வரைக்கும் போயிருக்கேன். அந்தப் பக்கம் அமேசான் காடு மாதிரி பச்ச பசேல்னு இருக்கும். இந்தப் பக்கம் காய்ஞ்சு போன புல் கிடக்கும்'

"அதுக்கு கேட்கல சார். நான் சொல்ல வர்றது வேற."

அப்படின்னா பாலக்காட்டு ஃபிகர்களப் பற்றி ஏதாவது டேட்டா சொல்லப் போறானோ என்று விபரீதமான கற்பனை எழுந்தது. என்ன சொல்ல வந்தாலும் கொஞ்சம் சீரியசான சமயத்தில ஃபிகரப் பத்தி பேசி காமெடி பண்ணாதே என்று எச்சரித்தேன்.

"ராஜஸ்தானிலிருந்து தமிழ்நாடு பார்டர் வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தமிழ்நாடு வந்துட்டாலே யாருக்கும் இந்தி தெரிய மாட்டேங்குது. ஏன் சார் இப்படி? இங்க பாருங்க பாலக்காடு பக்கமாத்தானே இருக்கு. நான் அங்க போனப்ப ஒரு பிரச்னையும் இல்ல. பெங்களூர்ல பிரச்னை இல்ல. எங்கேயும் இந்தி பேசுனா புரிஞ்சுக்கிறாங்க. இங்க மட்டும்தான் இந்தி பேச முடியாது'.

டேய் சிங்கு. இதுக்குப் பதில் சொல்லனும்னா நீயும் நானும் பிறக்காத ஆண்டான 1965-க்கு முன்பிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றேன். ஆனால் அவன் விளையாட்டுப் பையன் என்பதை வீதியில் போகும் ஃபிகரைப் பார்த்து இளித்தபோது புரிந்து கொண்டேன். இவனுக்கு திராவிடம், மொழிப்போர் பற்றியெல்லாம் சொன்னால் அந்த தகவல்களுக்கே இழுக்கு நேர்ந்துவிடும் என்பதால் விட்டுவிட்டேன்.

சுருக்கமாகச் சொன்னால் அதுக்கு பாலிடிக்ஸ்தான்டா காரணம் என்றேன். அவனுக்கு ஒருவாறு புரிந்து விட்டது. அப்படின்னா ஏன் சார் கர்ணாநிதி (கருணா அல்ல கர்ணா என்பதைக் கவனிங்க) பேமிலில இந்தி படிச்சிருக்காங்களே என்றான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவனுக்கு எப்படிடா இது தெரிஞ்சுது என்று குழப்பமாக இருந்தது.

"உனக்கு எப்படி சிங்கு தெரியும்?'

"தயாநிதி மாறன் மினிஸ்டர் ஆனபோது கர்ணாநிதி சொன்னாரே சார். தயாநிதிக்கு இந்தி தெரியும்னு'

இந்தியை எதிர்க்கும் கருணாநிதி குடும்ப அன்பர்கள் இந்தி படித்திருக்கிறார்கள் என்பதை இவன் கூடத் தெரிந்து வைத்திருக்கிறானே என்று எண்ணியபோது அவனது 'பொது அறிவின்' வீச்சு புரிந்தது.

இவன் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினால் தமிழனின் தன்மானம் என்னாவது. "நீங்க இங்க வந்தா தமிழ் படிச்சுத்தான் ஆக வேண்டும். நாங்க அங்க வரும்போது இந்தி மட்டும்தானே பேசுறீங்க...அடடா மதராஸி வந்துட்டான் என்று தமிழ், தெலுங்கு, கன்னடத்திலா பேசுறீங்க?' என்றேன் கோபமாக.

"சரி சார்...இப்போ என்ன நான் தமிழ் பேஸ்லயா? எனக்கு தைர்யம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு. தமிழ்நாடு வந்தா இனி ஒரு பிராப்ளம் இல்ல. ஏன்னா இப்போ எனக்குத் தமிழும் தெரியும்' கண்சிமிட்டி சிரித்தான். பொங்கி எழுந்த கோபமெல்லாம் கோக் பாட்டில் நுரைபோல வழிந்து ஓடியது.

மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நண்பர்கள் இல்லாத நாள். சினிமாவுக்குப் போகலாம் என்று சிங்கை அழைத்தேன். சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்தவன் சரி என்றான். ஆனால் அவன் எந்த படத்துக்கு என்று கேட்டிருந்தால் கூட பரவாயில்லை. அல்லது எந்த தியேட்டர் என்று கூட கேட்டிருக்கலாம். ஆனால் அவனே ஒரு தியேட்டர் பெயரைச் சொன்னான். அப்போது தான் எனக்கு உண்மையிலேயே கோபம் வந்தது. அவன் சொன்ன தியேட்டர்......

(தொடரும்)

7 comments:

மதன் said...

நீங்கள் போகும் போக்கைப் பார்த்தால் எதற்காக இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் என்று புரிகிறது கடைசியில் இந்தியை தமிழர்கள் கட்டாய மொழியாகப் படித்தே தீர வேண்டும் என்று முடிக்கப் போகிறீர்கள் அப்படித்தானே?
மலையாளிகள் ,தெலுங்கர்கள் வங்காளிகள் எல்லோரும் படிக்கிறார்கள் நாங்கள் படித்தால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதைதான் சொல்கிறேன் ,பல தேசிய இனங்கள் வாழும் இந்தியாவில் ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து உப்பரிகையில் ஏற்றுவது அடிப்படையில் தவறு ,இது மற்ற இனங்கள் எல்லாம் இரண்டாம் தர குடிமக்கள் ,இந்தி பேசுவோர் மட்டுமே உயர்வானவர்கள் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. ,இது எதிர்காலத்தில் இந்தியாவின் ஒற்றுமைக்கே பங்கம் விளைவிக்கும்.
இரண்டாவது காரணம் மற்ற இனங்களோடு ஒப்பிடும்போது தமிழ் இனத்தவரோடு கலந்திருக்கும் ஒரு வகையான அடிமை தாழ்வு மனப்பான்மை,தமது மொழி பேசுவதையே இழிவாகக் கருதும் தமிழர்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டு இருக்கிறார்கள் ,மற்ற இனங்கள் தமது மொழி பேசுவதை ஒரு இயல்பான செயலாகத்தான் நினைக்கிறார்கள் ,அவர்கள் தங்கள் மொழிகளை அழியவிட மாட்டார்கள் ,ஆனால் நமது தமிழர்கள் தமது மொழி அழிந்தாலும் அக்கறைப் பட மாட்டர்கள் ,அவ்வளவுதூரம் ஒரு சுரணை இல்லாத இனமாக தமிழ் இனம் மாறிக்கொண்டு வருகிறது ,அதனால்தான் இருக்கும் ஒரு சில தமிழ் உணர்வாளர்கள் இந்தி வந்து தமிழை அழித்துவிடுமோ என்று பயப்படுகிறோம்,ஆங்கிலத்தை விட இந்தி ஆபத்தானது ,ஆங்கிலத்தை தாய் மொழியாக பேசுபவர்கள் பக்கத்தில் இல்லை ,அத்துடன் அவர்கள் தங்கள் மொழியை எங்களிடம் திணிக்கவில்லை ஆனால் பக்கத்தில் இருக்கும் இந்தி அதிகாரம் மிக்க மொழியாக இருப்பதால் காலப்போக்கில் தமிழை அழித்துவிடும் ஆபத்து உள்ளது .

venkat said...

ஜெகஜித் சிங் மட்டுமில்லை தமிழ் நாட்டில் தற்போதைய இளைய தலைமுறை அத்தனைபேரும் அதைதான் கேக்கிறார்கள் ஏன் இந்தி கற்றுகொடுப்பதில்லை என்று?

எட்வின் said...

"இந்தி"யா அப்படின்னா என்னாங்க? இந்தி இல்லாம பல வெளி மாநில, வெளி நாட்டு பணியாளர்கள் கஷ்டப்படுவதை கண்டிருக்கிறேன் :(

Mathan said...

Ragunathan,
may I ask you why have you omitted my comments.?
I always thought you are a person who respect other people's point of view even if it is different from your own opinion

ரகுநாதன் said...

@ venkat

அந்தக் கேள்வி நிறையப் பேருக்கு இருக்கிறது.

ரகுநாதன் said...

@ எட்வின்

அதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன் எட்வின். நம்மைத்தான் வட நாட்டுக்காரர்கள் தென்னிந்தியர் என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிரத்திலும் அவர்களை தென்னிந்தியர் என்று அழைத்துக் கொள்கிறார்கள். நான் அந்த புணே பெண்ணிடம் கேட்டது இதுதான். ராஜ்தாக்கரே வட இந்தியர் என்று பிகாரிகளை அழைக்கிறார். நாங்கள் இது வரை மகாராஷ்டிரமே வட இந்தியா என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றேன். அவர்களை நினைத்து ஒரே குழப்பமாக இருக்கிறது.

Anonymous said...

தமிழ் நாட்டின் இளைய தலைமுறை இந்தி வேண்டுமென்று கேட்பது எதற்காக?ஒரு வேளை இந்தி படித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ !
வெளி நாடுகளில் வேலை பார்க்க ஆங்கிலம் போதும், தமிழ் நாட்டில் வேலை பார்க்க தமிழ் போதுமாக இருக்க வேண்டும் ,அப்படியானால் இந்தி பேசும் மாநிலங்களில் வேலை செய்யத்தானே இந்தி தேவை தமிழ் நாட்டின் ஜனத்தொகையில் எத்தனை வீதமானோர் இந்தி பேசும் மாநிலங்களில் வேலை செய்கிறார்கள் என்ற புள்ளி விபரம் தெரியுமா ?
அத்துடன் இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து எத்தனை பேர் தமிழ் நாட்டில் வேலை செய்கிறார்கள் என்று புள்ளி விபரம் தெரியுமா?
தமிழ் நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது .இந்தி பேசும் பீகார் உத்தரபிரதேச மாநிலங்களில் பிறப்பு விகிதம் கூடி அவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது ,அதனால் அந்த மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வேலைக்காக படையெடுக்கக் கூடும் அந்த சமயத்தில் இந்தி தெரிந்தால்தான் வேலை என்றால் தமிழர்களோடு வேலைக்காக இந்திக்காரர்கள் போட்டியிடும்போது அவர்களின் தாய்மொழியில் அவர்களின் திறமை நிச்சயம் தமிழர்களின் திறமையை விட மேலாக இருக்கும் அவர்களே பெரும்பாலான வேலைகளைப் பெற்றுக்கொள்வார்கள் .
விளைவு --எதிர்காலத்தில் தமிழர் தமது மண்ணிலேயே வேலை வாய்ப்பையும் இழக்கபோகிறார்கள் .

சி.குமார்