Friday, October 2, 2009

"இந்தி"யன் பார்வையில் தமிழன் - பார்ட் 2

அன்று ஞாயிற்றுக்கிழமை. என் நண்பர்கள் எல்லாரும் ஊருக்குச் சென்றிருந்தனர். நான் மட்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தபடி கட்டிலில் சாய்ந்து கிடந்தேன். சினிமாவுக்குப் போகலாம் என்றால் அதற்கும் வழியில்லாமல் இருந்தது.

ஐந்தாறு பேர் ஒரு குரூப்பாகக் கிளம்பி தியேட்டருக்குப் போனால் தான் படத்துக்கு போனது போல இருக்கும். அதுவும் பக்கத்தில் உட்காரும் அங்கிள், ஆன்ட்டி, அவங்க பொண்ணு என்று எல்லோரும் முகத்தை சுழிக்கும் அளவுக்கு சீரியஸ் சீனுக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரித்து கடுப்பேற்றினால் தான் படம் பார்த்த மாதிரியே இருக்கும். (அப்படி ஒரு நாள் 'தல' படத்துக்குப் போய் தியேட்டரையே சிரிக்க வைத்த அனுபவம் மற்றொரு பதிவில்) அதைவிட்டு விட்டு யாரும் இல்லாமல் தனியாகப் போய் எசகுபிசகாக மாட்டிக் கொண்டால் கிழிஞ்சிரும் என்ற யோஜனையில் தலையை சொறிந்து கொண்டு இருந்தேன்.

லேசாக கண்ணயரும் நேரம் பார்த்து ஒரு குரல் கேட்டது. உள்ளே இருந்தல்ல. அறைக்கு வெளியே இருந்து.

"சார் தண்ணீ இர்க்கா...?" மறுபடியும் அவனேதான். வந்துட்டான்யா ஜெகஜித் சிங்.
அதற்கு முன், நான் கேள்வி கேட்ட பிறகு அவன் திருப்பிக் கேட்டதைக் கூறிவிடுகிறேன். அவன் கேட்டது எனக்கு நன்றாகவே புரிந்தது. கூடவே அதில் ஒரு மெசேஜும் இருந்தது.

தன் பேரைச் சொல்லி முடித்த ஜெகஜித் சிங் என்னிடம் கேட்டது இதுதான்.

"உங்க பேரு என்ன சார்? இதே ஊரு தானா நீங்க?" அழகுத் தமிழில் கேட்டான்.

அந்தக் கேள்வியில், "நீங்க வேணா இந்தியை வெறுக்கலாம்...நாங்க அப்படியில்ல" என்ற தொனி தெரிந்தது. அவனிடம் "வாட்ஸ் யுவர் நேம்" என்று கேட்டதற்கு வெட்கமாகவும் இருந்தது. வேறு வழியின்றி "பேரு ரகு... ஊரு வேற" என்று சிரித்து வைத்தேன்.

அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி சிரித்துக் கொண்டோம். சாப்பிட்டாச்சா என்று கேட்பது முதல் இந்தி சினிமா எந்தத் தியேட்டரில் ஓடும் என்பது வரை தமிழிலேயே கஷ்டப்பட்டு கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

"நான் டிகிரி பாதி படிச்சிருக்கேன் சார். எங்க ஊருப் பக்கம் (கங்கா நகர் மாவட்டம்) எங்களுக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு..." என்றான் ஒருநாள். "டேய்...உண்மையச் சொல்லு...ஏகப்பட்ட சொத்தா இல்ல ஏகப்பட்ட சொக்காவா" என்று நான் கேட்டது அவனுக்குப் புரியவில்லை. "வீட்டில் சண்டை அதனால தில்லி போய் அப்படியே பெங்களூர் வந்து சென்னையில் கொஞ்ச நாள் இருந்து இப்போ கோய்ம்பேத்தூர் வந்துட்டேன் சார்..." அவன் முழு வரலாற்றையும் 3 வரியில் அறிந்து கொண்டேன்.

ஏதோ ராஜ்புத்தோ எதுவோ சரியாக நினைவில்லை...ஆனால் மேல் சாதியைச் சேர்ந்தவன் என்று கூறிக் கொண்டான். அதனால் முட்டை கூட சாப்பிடமாட்டேன் என்றான். "டேய் நிஜமாவா......பான் பராக் போடற... முட்டை சாப்பிட மாட்டயா" என்று சுரண்டினேன். ஒத்துக் கொண்டான். "வீட்லதான் சாப்பிடமாட்டேன் சார்...வெளியே அதெல்லாம் நை சாப்" என்று எல்லா பல்லையும் காட்டினான்.

அவனை எனக்கு ஏனோ பிடித்துவிட்டது. அதற்கு அவன் தமிழார்வமும் காரணம். என்ன சொன்னாலும் அதில் தெரியாத தமிழ் சொல்லுக்கு பொருள் கேட்பான்.

ஒரு முறை வேண்டுமென்றே தாங்க்ஸ் என்பதற்கு பதிலாக நன்றி என்றேன். "அப்படின்னா தாங்க்ஸ்தானே" என்று கேட்டு புரிந்து கொண்டான். நம்ம புத்தி கொஞ்சம் கிறுக்குப் புத்திதானே...கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுக்கலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் உள்ளிருக்கும் தமிழன் சாதாரணமான ஆளா என்ன? "எப்படியாவது இவனைத் தமிழ் படிக்க வைத்து ஒரு ராஜஸ்தானி தமிழனாக்கிவிடு. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" என்று மண்டையில் பல்பு எரிந்தது.

ஒட்டு மொத்த இந்தி எதிர்ப்பாளர்களின் பிரதிநிதியாக என்னை நானே அப்பாய்ண்ட் பண்ணிக்கிட்டது அன்றைக்குத் தான்.

அவனும் அதற்கு தயாராகத்தான் இருந்தான். சிலேட், பென்சிலை ஒருகையிலும், அரைக்கால் டவுசரை மறு கையிலும் வைத்துக் கொண்டு ஓடி வரும் அளவுக்கு இல்லாவிட்டாலும், உங்க மொழியை நான் தெரிந்து கொள்ள தயார் என்ற அளவுக்கு ஆர்வத்தை காட்டினான்.

ஆனால் ஒரே ஒரு நாள் வகுப்புடன் அவனுக்கு தமிழ் கற்றுத் தரும் ஆசை அடியோடு நாசமா போச்சு. அதுக்கு நான் விளையாட்டாய் சொல்லிக் கொடுத்த ஒரு வார்த்தை தான் காரணம். எதுக்குடா இவனுக்கு அதை சொன்னோம் என்ற அளவுக்கு எதற்கெடுத்தாலும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதம் போல சொல்ல ஆரம்பித்துவிட்டான். அது......

(தொடரும்)

5 comments:

venkat said...

we want hindi compulsory

ரகுநாதன் said...

that's a controversial debate venkat. it has pros and cons

mathan said...

தமிழ் நாட்டில் உள்ள கோயம்புத்தூருக்கு இன்னொரு மொழி பேசுபவர் குடியேறி இருந்தால் அவர் தமிழ் பேசுவது ஒரு பெரிய விஷயமா?
நீங்கள் ராஜஸ்தானில் இருக்கும்போது அந்த ஊர்க்காரர் உங்களுடன் தமிழ் பேசினால் அது பெரிய விஷயம். அங்கு நீங்கள் போனால், நீங்கள் அவருடன் இந்தியோ அல்லது மிகவும் சரியாகச் சொன்னாள் ராஜஸ்தானி மொழி பேசுவதோ இயல்பாக எதிர்பார்க்கக் கூடிய ஒரு விஷயம்தான் ,ஆனால் தமிழ் நாட்டில் தங்கியுள்ள ஒருவரோடு நீங்கள் இந்தியில் பேச வேண்டும் என்ற மாதிரியாகவும் இல்லாவிட்டால் அது இந்தி மொழியை வெறுப்பது மாதிரியான ஒரு கருத்தை நீங்கள் உருவாக்க நினைக்கிறீர்கள் ,அதற்கு ஆதரவாக வெங்கட் போன்றவர்கள் சப்பைக்கட்டுக் கட்டி தங்கள் இந்திப்பற்றைத் தெரிவிக்கிறார்கள்.
பல மொழிகளைக் கற்பது ஒரு நல்ல விஷயம்தான் ,எந்த மொழிமீதும் தமிழர்களுக்கு வெறுப்பும் இல்லை ஆனால் பல மொழிகள் பேசும் இந்தியாவில் ஒரு மொழிக்கு மட்டும் உயர்ந்த அந்தஸ்து கொடுப்பது ,அந்த மொழியைக் கட்டாய மொழியாக மற்ற இனத்தவர் மீது திணிப்பது என்பது மற்ற இனத்தவரை இரண்டாம் தர இந்தியக் குடிமக்கள் மாதிரி நடத்துவது மட்டுமல்ல எதிர்காலத்தில் மற்ற மொழிகளின் அழிவுக்கும் இந்தியாவின் ஒற்றுமை இன்மைக்கும் வழி கோலும்.

பிரான்ஸ் நாட்டுக்கு நீங்கள் வேலைக்காகவோ வியாபாரம் செய்யவோ போனால் பிரெஞ்சு மொழி கற்றுக்கொண்டுதான் அங்கு போவீர்கள்.
பிரெஞ்சுக்காரர் தமிழ் கற்றுக்கொண்டு உங்களோடு பேச வேண்டும் என்று நினைக்கவும் மாட்டீர்கள் ,அப்படி அவர் உங்களோடு தமிழ் பேசாமல் விட்டதற்காக அவர் தமிழை வெறுக்கிறார் என்று நீங்கள் நினைக்கவும் மாட்டீர்கள்தானே.
அதே லாஜிக்கை இங்கே காட்டுங்கள்.
வெங்கட் ,
எல்லா மொழிகளையும் விருப்பம் என்றால் படியுங்கள் ,ஆனால் இந்திக்கு சலாம் போடும் இந்த அடிமைப் புத்தியில் இருந்து வெளி வாருங்கள். இப்படியே போனால் வேறு இனத்தவர்கள் தமிழை அழிக்கத் தேவை இல்லை ,தமிழர்களே அந்தப் புண்ணியத்தை செய்து முடித்து விடுவார்கள்.

ரகுநாதன் said...

நல்லது மதன். உங்கள் கருத்தில் எனக்கு எந்த வேறுபாடும் இல்லை. ஏற்கெனவே நான் சொன்னது போல இது ஒரு அனுபவம் குறித்த பதிவு. அதை தொடராக எழுதுகிறேன்.

இன்னும் அவர்கள் இந்தி ஏன் இங்கே படிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று விவாதம் செய்ததையும் நான் பேரறிஞர் அண்ணா சொன்ன கருத்து முதல் பல்வேறு சான்றுகளை வைத்து செய்த வாதங்களையும் எழுதுவேன்.

//ஆனால் இந்திக்கு சலாம் போடும் இந்த அடிமைப் புத்தியில் இருந்து வெளி வாருங்கள்.//

சலாம் போடும் அடிமை அல்ல.
எதிர்ப்பதும் ஆதரவு கொடுப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் அதை நம் மீது கட்டாயமாக திணிப்பதை ஏற்க முடியாது. ஆனால் இன்னொரு விடயம். நம்மை விட கன்னடனும் மலையாளத்தானும் அதிக மொழிப் பற்றோடு இருக்கிறார்கள். இரண்டு மலையாளத்தான் சேர்ந்தால் அவர்கள் ஆங்கிலத்தில் பேசி பார்த்துள்ளீர்களா? அதுவும் உணர்வு பூர்வமாக. என்னோடு நல்ல தமிழில் பேசினால் கூட இன்னொரு மலையாளத்தானை பார்த்தும் அப்படியே கட் பண்ணிட்டு போன ஆட்களை எனக்கு நிறைய தெரியும். நம்மை விட மொழிப் பற்று அவர்களுக்கு உள்ளதே. அவர்களும் இந்தி படிகிரார்களே.

நானும் இந்தியை எதிர்பவன் தான் என்று ஒரு வரி எழுதினால் அதற்கு மேல் ஒன்னுமே இல்லை. அதைவிட நான் தமிழை காதலிப்பவன் என்று சொல்லலாம்.

//இப்படியே போனால் வேறு இனத்தவர்கள் தமிழை அழிக்கத் தேவை இல்லை ,தமிழர்களே அந்தப் புண்ணியத்தை செய்து முடித்து விடுவார்கள்.//
தமிழை நீங்களோ நானோ நினைத்தவுடன் அழித்து விட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ அடக்கு முறைகளை அரசு முறையிலும், அரசியல் வழியிலும் பார்த்துவிட்டு வந்து நிற்கிறது எம் தமிழ். இனி அழிந்தால் மற்ற இந்திய மொழிக்கும் நேர்ந்தால் மட்டுமே சாத்தியம்.
அப்புறம், கொஞ்சம் தமிழ் விக்கிப்பீடியா பக்கமும் போய் வாருங்கள்.

venkat said...

//வெங்கட் ,
எல்லா மொழிகளையும் விருப்பம் என்றால் படியுங்கள் ,ஆனால் இந்திக்கு சலாம் போடும் இந்த அடிமைப் புத்தியில் இருந்து வெளி வாருங்கள். இப்படியே போனால் வேறு இனத்தவர்கள் தமிழை அழிக்கத் தேவை இல்லை ,தமிழர்களே அந்தப் புண்ணியத்தை செய்து முடித்து விடுவார்கள்.//


நண்பர் மதன் அவர்களுக்கு வணக்கம்.
ஹிந்தி கற்பது அடிமைத்தனம் அல்ல.
வியாபார விசயமாகவும், அலுவலக விசயமாகவும்,
சென்னையை தாண்டி டில்லி வரை சென்றாலும்
ஹிந்தி தெரிந்திருந்தால் சுலபமாக வேலையை
முடித்துக்கொண்டு நிம்தியாக வரலாம்.
எந்த பிராந்திய மொழியை கற்றுக்கொண்டாலும்
அந்தந்த மாநிலத்தில் மட்டும்தான் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் ஹிந்தி மொழி கற்றுக்கொண்டால்
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சென்று வரலாம்.
இதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். நான் அலுவலக வேலை விசயமாக
ஹைதராபாத் சென்ற பொழுது ஹிந்தியின் முக்கியத்தினை உணர்ந்தேன்.
தாங்களுக்கு இது போன்ற அனுபவம் வந்ததா என்று தொரியவில்லை.
ஹிந்தி கற்பது அடிமைத்தனம் என்று நினைக்காமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா
ஆகிய மாநிலங்களில் ஹிந்தி கற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய தாய் மொழி
அழிந்து விட்டதா? தமிழ் நாட்டில் சுய நல அரசியல்வாதிகளின் சுய லாபத்திற்காக ஹிந்தி கற்கவிடாமல்
செய்துவிட்டார்கள். அண்டை மாநிலங்களில் நீங்கள் கேட்கும் கேள்வி எந்த மொழியாக இருந்தாலும்,
அவர்கள் அவர்களுடைய தாய் மொழியில் தான் பதில் கூறுவார்கள். ஆனால் தமிழ் நாட்டில் என்ன வாழ்கிறது?
தமிழில் கேள்வி கேட்டால் ஆங்கிலத்தில் தான் பதில் கூறுகிறார்கள். இதை நான் கூறவில்லை
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்சியில் நடுவராக வந்த ஒரு விஐபி கூறினார்.
நண்பரே ஹிந்தி கற்றால் தமிழ் அழிந்துவிடும் என்ற வாதம் அடிப்படையற்ற வாதம்.